20 மே, 2010

தவ்ஹீத் மாப்பிள்ளை

தவ்ஹீதின் இளைய சமுதாயமே! நீங்கள் தொழுகையில் விரலை அசைப்பதையும்,தொப்பி அணியாமல் தொழுவதையும்,தாடி வளர்ப்பதையும்,கரண்டைக் காலுக்கு மேல் கைலி கட்டுவதையும்,சமாதி வழிபாட்டை எதிர்ப்பதையும் மட்டும்தான் ஏகத்துவக் கொள்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
இதை மட்டும் நீங்கள் கடைபிடித்து மாற்றுக் கொள்கை உடையவர்களிடம் தவ்ஹீத் கொள்கையை நிலை நாட்டப் போராடினால் நீங்கள் தவ்ஹீதுவாதிகள் ஆகி விடுவீர்களா? இது மட்டும்தான் தவ்ஹீத் கொள்கையா? உங்களிடம் தவ்ஹீதில் உறுதியான கொள்கைப் பிடிப்பு இருக்கிறதா? என்பதை மக்கள் எப்படிக் கணிக்கிறார்கள் தெரியுமா?
உங்கள் வாழ்நாளில் வரும் பல விஷயங்களைக் கவனித்து அதில் இவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே தவ்ஹீதின் கொள்கைப் பிடிப்பின் அளவைக் கணக்கிடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஏகத்துவவாதிகளின் கொள்கைப் பிடிப்பை அளவிடுகிறார்கள்.ஏகத்துவத்தின் பிடிப்பு எப்படி இருக்கிறது என்பதை அவர்களின் திருமணம் என்ற நிகழ்ச்சி அழகாகப் படம் பிடித்துக் காட்டி விடுகிறது.
திருமணத்தில் திருக்குர்ஆன் நபி வழியின்படி நடக்கிறார்களா? இல்லை பேருக்குத் திருமணத்தை நடத்துகிறார்களா? என்பதை மக்கள் பார்க்கிறார்கள்.அவர்களின் பார்வையில் பெரும்பாலான தவ்ஹீத்வாதிகளின் திருமணம் பெயருக்கு இஸ்லாமியத் திருமணமாகக் காட்சி தருகின்றது.
ஆம்! இன்று தவ்ஹீத்வாதிகள் என்று கூறுபவர்களின் திருமணமும், அதன் பிண்ணனியும் அவர்களின் கொள்கைப் பிடிப்பைத் தெளிவாக அடையாளம் காட்டத்தான் செய்கிறது.
"பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்துவிடுங்கள்!அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மன நிறைவுடனும், மகிழ்வுடனும் உண்ணுங்கள்! அல்குர்ஆன்:4:4 இந்த வசனத்தின் அடிப்படையில் தவ்ஹீத்வாதிகள் சில ரூபாய்களை அல்லது சிறிதளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு பயான் ஒன்றையும் வைத்து விட்டு நாங்கள் நபி வழித் திருமணம் செய்துவிட்டோம் என்று கூறிக் கொள்கிறார்கள்.ஆனால் முழுமையாக நபி வழியைப் பின்பற்றி திருமணம் செய்யவில்லை.
"நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
1.அவளது செல்வத்திற்காக 2.அவளது குடும்ப பாரம்பரியத்திற்காக
3.அவளது அழகிற்காக
4.அவளது மார்க்கத்திற்காக
ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா(ரலி).நூல்:புகாரி:5090

கருத்துகள் இல்லை: